
சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் 2025
இந்தியாவின் மிகவும் மிக பெரிய கிளாசிக்கல் சதுரங்கப் போட்டியான சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் 2025 மூன்றாவது சீசன் , சென்னையில் உள்ள ஹயாட் ரீஜென்சி நட்சத்திரா விடுதியில் நடைபெற்று வருகிறது.
இந்தியா மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து 19 சிறந்த கிராண்ட்மாஸ்டர்கள் மற்றும் ஒரு சர்வதேச மாஸ்டர் பங்கேற்றுள்ள இந்தப் போட்டியின் மொத்த பரிசுத்தொகை ரூ.₹1 கோடி ஆகும். இந்தா தொடரில் வெற்றிப்பெற்றால் FIDE சர்க்யூட் புள்ளிகளையும் வழங்கபடுகிறது.
இந்த தொடர் மாஸ்டர்ஸ் மற்றும் சேலஞ்சர்ஸ் என இரண்டு பிரிவுகளில் நடைபெறுகிறது. இரு பிரிவிலும் தலா 10 வீரர்கள் கலந்து கொண்டு ரவுண்ட்-ராபின் முறையில் நடத்தப்பட்டு வருகிறது.
போட்டியின் 5-வது நாளான இன்று 5-வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. மாஸ்டர்ஸ் பிரிவில் நெதர்லாந்தின் அனிஷ் கிரி, இந்திய கிராண்ட் மாஸ்டரான முரளி கார்த்திக்கேயனுடன் மோதினார். இதில் அனிஷ் கிரி வெள்ளை காய்களுடனும், முரளி கார்த்திக்கேயன் கருப்பு காய்களுடனும் விளையாடினார்கள். இந்த ஆட்டம் 73-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது.
மற்றொரு ஆட்டத்தில் இந்திய கிராண்ட் மாஸ்டரான விதித் குஜராத்தி, ஜெர்மனி கிராண்ட் மாஸ்டரான வின்சென்ட் கீமருடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில் விதித் குஜராத்தி வெள்ளை காய்களுடனும், வின்சென்ட் கீமர் கருப்பு காய்களுடனும் களமிறங்கினர். இந்த ஆட்டம் 40-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது.
உலகின் 5-ம் நிலை வீரரான இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, சகநாட்டைந்த கிராண்ட் மாஸ்டரான பிரணவுடன் மோதினார். அர்ஜுன் எரிகைசி வெள்ளை காய்களுடனும், பிரணவ் கருப்பு காய்களுடனும் விளையாடினார்கள். இந்த ஆட்டம் 78-வது நகர்த்தலின் போது டிரா ஆனது.
முந்தைய சுற்றில் அர்ஜுன் எரிகைசியை தோற்கடித்த இந்திய கிராண்ட் மாஸ்டரான நிஹால் சரின், 5-வது சுற்றில் அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான அவாண்டர் லியாங்குடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில் நிஹால் சரின் கருப்பு காய்களுடனும், அவாண்டர் லியாங் வெள்ளை காய்களுடனும் களமிறங்கினார்கள். இந்த ஆட்டம் 29-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது.
நெதர்லாந்தின் ஜோர்டன் வான் பாரஸ்ட், அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான ரே ராப்சனுடன் பலப்ரீட்சை நடத்தினார். ஜோர்டன் வான் பாரஸ்ட் வெள்ளை காய்களுடனும், ரே ராப்சன் கருப்பு காய்களுடனும் விளையாடினார்கள். இதில் 82-வது நகர்த்தலின் போது ஜோர்டன் வான் பாரஸ்ட் வெற்றி பெற்றார்.
சேலஞ்சர்ஸ் பிரிவு 5-வது சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.வைஷாலி, சர்வதேச மாஸ்டரான ஜி.பி.ஹர்ஷவர்தனுடன் மோதினார். வைஷாலி வெள்ளை காய்களுடனும், ஹர்ஷவர்தன் கருப்பு காய்களுடனும் களமிறங்கினர். இதில் 53-வது நகர்த்தலின் போது ஹர்ஷவர்தன் வெற்றி பெற்றார். 3 ஆட்டங்களில் தோல்வியையும், ஒரு ஆட்டத்தை டிராவும் செய்திருந்த ஹர்ஷவர்தனுக்கு இது முதல் வெற்றியாக அமைந்தது.
மற்றொரு ஆட்டத்தில் ஹரிகா துரோணவல்லி, அபிமன்யு புராணிக்குடன் மோதினார். இதில் ஹரிகா வெள்ளை காய்களுடனும், அபிமன்யு கருப்பு காய்களுடனும் விளையாடினார்கள். இதில் அபிமன்யு புராணிக் 39-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். எம்.பிரனேஷ், லியோன் லூக் மென்டோன்காவுடன் பலப்பரீட்சை நடத்தினார். இந்த ஆட்டம் 38-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது.
தொடர்ச்சியாக 4 ஆட்டங்களை டிரா செய்த அதிபன் பாஸ்கரன், ஆர்யன் சோப்ராவுடன் மோதினார். இதில் ஆர்யன் சோப்ரா வெள்ளை காய்களுடனும், அதிபன் பாஸ்கரன் கருப்பு காய்களுடனும் களமிறங்கினர். இந்த ஆட்டம் 52-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. திப்தாயன் கோஷ், பா.இனியனுடன் பலப்பரீட்சை நடத்தினார். இந்த ஆட்டம் 25-வது நகர்த்தலின் போது டிரா ஆனது.
5 சுற்றுகளின் முடிவில் மாஸ்டர்ஸ் பிரிவு புள்ளிகள் பட்டியல்:
1. வின்சென்ட் கீமர் – 4
2. அர்ஜுன் எரிகைசி – 3
3. அனிஷ் கிரி – 2.5
4. விதித் குஜ்ராத்தி – 2.5
5. முரளி கார்த்திக்கேயன் – 2.5
6. அவோண்டர் லியாங் – 2.5
7. நிஹால் சரின் – 2
8. வி.பிரணவ் – 2
9. ரே ராப்சன் – 2
10. ஜோர்டான் வான் பாரஸ்ட் – 2
5 சுற்றுகளின் முடிவில் சேலஞ்சர்ஸ் பிரிவு புள்ளிகள் பட்டியல்:
1. அபிமன்யு புராணிக் – 4.5
2. எம்.பிரனேஷ் – 3.5
3. திப்தாயன் கோஷ் – 3.5
4. லியோன் லூக் மென்டோன்கா – 3.5
5. பா.இனியன் – 3
6. அதிபன் பாஸ்கரன் – 2.5
7. ஆர்யன் சோப்ரா – 1.5
8. ஜி.பி.ஹர்ஷவர்தன் – 1.5
9. ஆர்.வைஷாலி – 1
10. ஹரிகா துரோணவல்லி – 0.5